ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்த காரியங்கள் அநேகருக்கு நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் காணப்படுகிறது . ஆனால் எல்லா கேள்விகளுக்கும் , சந்தேகங்களுக்கும் பரிசுத்த ஆவியானவரே நமக்கு எழுதி தந்திருக்கிற வேத புத்தகம் ஒன்றே பதில் கொடுக்க முடியும் என்பதே உண்மை .
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறப்பதற்கு பல நூறு / ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவரை குறித்த உரைக்கப்பட்ட அநேகம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறி இருப்பதை நாம் புதிய ஏற்பாட்டு பகுதியில் / வரலாற்றில் காணமுடியும் . அப்படிப்பட்ட சில தீர்க்கதரிசனங்கள் மற்றும் அவைகளின் நிறைவேறுதல்கள் ஆகியவற்றை நாம் கவனித்து பார்த்தால்
போதும் இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்திற்கு வருவார் என்ற தீர்க்கதரிசனம் அதிவிரைவில் நிறைவேறப்போகிற உண்மை என்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும் .
இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக பிறப்பார்
ஆதாமும் , ஏவாளும் தேவன் விதித்த கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தபொழுது , பிதாவாகிய தேவன் அவர்கள் மூலம் உலகில் பிரவேசித்த பாவத்திற்கு பரிகாரம் கொடுக்க வரப்போகும் இயேசு கிறிஸ்து ஸ்தீரியின் வித்தாக பிறந்து , பாவத்தின் அதிகாரியான பிசாசை ஜெயிப்பார் என்று முதல் தீர்க்கதரிசனத்தை ஆதி 3 : 15 ல் கொடுப்பதை நாம் பார்க்கிறோம் .
" உனக்கும் ஸதீரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் ; அவர் உன் தலையை நசுக்குவார் , நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் " ஆதி 3 : 15
இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளின் படியே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிருபையும்
, சத்தியமும் நிறைந்தவராய் ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முன்பாக ஸதீரியின் வித்தாக இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து , கல்வாரி சிலுவையில் பிசாசின் தலையை நசுக்கி ஜெயம் எடுத்தார்
. இந்த தீர்க்கதரிசன நிறைவேறுதலை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சாவிக்கு எழுதுகிற பொழுது இப்படி எழுதுகிறார்
"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். " கலா 4 : 5
இயேசு கிறிஸ்து ஆபிரஹாமின் சந்ததியில் பிறப்பார்
விக்கிரகங்களை சேவித்து கொண்டிருந்த ஆபிராமை தேவன் தெரிந்தெடுத்து , அவரை அழைத்து அவரை ஆசீர்வதித்த பொழுது " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் " என்ற ஒரு பெரிய ஆசீர்வாதத்தை ஆதியாகமம் 12 : 3 ல் கொடுத்ததை நாம் வாசிக்கிறோம் .
ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கின் மூலம் ஒரு குறிப்பிட்ட சந்ததி மாத்திரம் தான் ( இஸ்ரவேல் ஜனம் ) மாத்திரம் தான் ஆசீர்வதிக்கப்பட முடியும் . எனவே இங்கு குறிப்பிடபட்டு இருக்கிற இந்த ஆசீர்வாதம் ஆபிரகாமின் சந்ந்ததியான இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்பதே சாலப் பொருந்தும் .
எனவே தான் புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிறபொழுதே
" ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:" மத் 1 : 1 என்று ஆரம்பிக்கிறது .
மேலும் இந்த சந்ததியை குறித்து, அதாவது இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சபைக்கு எழுதுகிற பொழுது இப்படி எழுதுகிறார்
“ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே “. - கலா 3 : 16
இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் பிறப்பார் :
கோத்திரப்பிதாவாகிய யாக்கோபு தனது அந்திம காலத்தில் தனது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் பொழுது சமாதான கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்து உள்ளதை நாம் ஆதியாகமம் 49 ம் அதிகாரத்தில் பார்க்கலாம் .
"சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்."
- ஆதி 49 : 10
இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் படியே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் பிறந்தார் என்பதை நாம் மத்தேயு 1 ம் அதிகாரம் 2 , 3 வசனங்களிலும் மற்றும் லூக்கா எழுதின சுவிஷேசம் 3 ம் அதிகாரத்திலும் நாம் வாசித்து பார்க்க முடியும் . எபிரேய நிருபத்தை ஆக்கியோனும் இந்த காரியத்தை குறித்து எழுதுகையில் இப்படி எழுதுகிறார்
"நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது;"
எபி 7 ; 14
இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் :
கர்த்தர் இயேசு யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்ற தீர்க்கதரிசனம் மாத்திரமல்ல அவர் பெத்லகேலமிலே பிறப்பார் என்றும் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டது . கிட்டத்தட்ட கிமு 710 ம் வருடத்தில் மீகா தீர்க்கதரிசி இதைக்குறித்து மீகா 5 : 2 ல் இப்படியாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார் ...
"எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது." மீகா 5 ; 2
இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காகவே குடிமதிப்பு எழுதும்படி அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பது தான் என் விசுவாசம் . ஆம் பாருங்கள் லூக்கா எழுதின சுவிஷேசம் 2 ம் அதிகாரம் 5 ம் வசனத்தை நாம் வாசித்து பார்க்கிற பொழுது அவர்கள் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு போனார்கள் என்று எழுதப்பட்டு உள்ளது
. ஆமென் ....அல்லேலுயா ...!
இயேசு கிறிஸ்து வாசம் பண்ணிய இடங்கள்
ஆண்டவர் இயேசு வாசம் பண்ணிய இடங்கள் கூட தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த ஆச்சரியம் தானே ...
ஆண்டவர் இயேசு எகிப்துக்கு கொண்டு போகப்படுவார் என்பதையும் , அவர் சில காலம் அங்கு வாசம் பண்ண வேண்டும் என்பதையும் ஓசியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் - ஓசியா 11 : 1 " கிமு 740 ம் வருடத்தில் உரைத்துள்ளார் ..
இந்த தீர்க்கதரிசனம நிறைவேறியதை நாம் மத்தேயு 2 ம் அதிகாரம் 14 மற்றும் 15 ம் வசனங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம் . இயேசு இந்த உலகத்தில் குழந்தையாக பிறந்த பொழுது ஏரோது அவரை கொலை செய்ய தேடினபடியால் , தூதன் மூலம் எச்சரிக்கப்பட்டு யோசேப்பும் , மரியாளும் இயேசுவை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு போனார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது .
இயேசு கிறிஸ்து கலிலேயா என்ற இடத்தில வாசம் பண்ணுவார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி கிமு 740 ல் தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளதை நாம் ஏசாயா 9 ம் அதிகாரம் 1 , 2 வசனங்களில் நாம் வாசித்து பார்க்க முடியும் .
இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக இயேசு கிறிஸ்து நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார் என்று மத்தேயு 4 ம் அதிகாரம் 13 , 14
, 15 வசனங்களில் நாம் வாசித்து பார்க்கமுடிகிறது
இயேசு கிறிஸ்து 30 வெள்ளி காசுக்கு காட்டி கொடுக்கப்படுவார்
இயேசு கிறிஸ்துவுக்கு வேண்டிய நண்பனே அவரை காட்டி கொடுப்பான் என்பதை தாவீது பரிசுத்த ஆவியினால் நிறைந்து தீர்க்கதரிசனமாக தனது சங்கீதத்தில் சொல்லியிருக்கிறதை நாம் பார்க்கமுடியும் . சங்கீதம் 41 : 9 சொல்லுகிறது , "
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்
"
அதை போலவே , இயேசுவோடு கூட இருந்து அப்பம் புசித்தவனும் , அவருடைய அற்புதங்களையெல்லாம் கூட இருந்து பார்த்தவனுமாகிய யூதாஸ் அவரை காட்டி கொடுத்தான் ...
அவரை காட்டி கொடுப்பதற்காக கூலியாக 30 வெள்ளிக்காசை யூதாஸ் பெற்று கொள்ளுவான் என்பதையும் , பின்பு அந்த 30 வெள்ளிகாசை கொண்டு குயவனின் நிலம் ஓன்று வாங்கப்படும் என்பதை கூட தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது ...
"உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்."
சகரி 11 ; 12 , 13 . இந்த தீர்க்கதரிசனம் கூறப்பட்ட காலம் தோராயமாக கிமு 487 ஆக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது .
இந்த தீர்க்கதரிசனம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது என்பதை மத்தேயு 26 : 15 மற்றும் மத்தேயு 27 ; 3 -
10 வசனங்களை வாசிக்கும் பொழுது நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது
இயேசு கிறிஸ்துவின் மரணம்
இயேசு கிறிஸ்து எப்படி பாடுபட்டு
, அடிக்கப்பட்டு , ஒடுக்கபட்டவராய் கல்வாரியில் சிலுவையில் அறையப்படுவார் என்பதை ஏசாயா 53 ம அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி
மூலமாய் பரிசுத்த ஆவியானவர் தெளிவாக உரைத்துள்ளதை நாம் பார்க்கமுடியும் . அவைகள் அனைத்தும் அப்படியே இயேசு கிறிஸ்துவின் பூவுலக வாழ்வில் சம்பவித்ததை நாம் அறிந்திருக்கிறோம் .
இன்னும் அநேக காரியங்கள் , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவை எல்லாம் துளி கூட மாறாமல் அப்படியே நிறைவேறி இருக்கும் பொழுது , ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்த தரிசனங்களும் , தீர்க்கதரிசனங்களும் , தேவ வார்த்தைகளும் நிச்சயம் நிறைவேறும் என்பது நிச்சயமல்லவா ....!