சனி, மார்ச் 03, 2012

ஆசரிப்பு கூடாரம் - எப்படிபட்டவன் ஊழியத்திற்கு உரியவன் - பாகம் 4


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரிய தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .  ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தியானித்து வருகிறோம் .  இந்த பகுதியில் எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் என்பதை நாம் சிந்திப்போம் .....



ஊழியன் அழைக்கப்பட்டு இருக்கவேண்டும் :-

எபி 5 : 4 சொல்லுகிறது , " ஆரோனை போல தேவனால் அழைக்கப்பட்டால் ஒழிய ஒருவனும் இந்த கனமான ஊழியத்திற்கு தானாய் ஏற்படுவதில்லை " என்று .  ஆம்  யாத் 4 ; 16 , 17 வாசித்து பாருங்கள் , தேவன் ஆரோனை ஊழியத்திற்கு அழைத்ததை நாம் அறிந்து கொள்ளமுடியும் .

கர்த்தருடைய ஊழியம் என்பது சாதாரண வேலை அல்ல . கர்த்தருடைய ஊழியதிர்க்கென்று விசேஷித்த , தெளிவான அழைப்பு வேண்டும் .  பேதுருவை கர்த்தர் ஊழியத்திற்கு அழைத்தார் ( மத் 4 : 18 , 19 ).  பவுலுக்கு நிச்சயமான அழைப்பை கொடுத்தார் ( அப்போ 9 : 15 மற்றும் 1 திமோ 1 : 12 ). அப்படியே ஊழியதிர்க்காய் புறப்படுகிறவர்களுக்கு தெளிவான அழைப்பு வேண்டும் . அழைப்பிலாதவர் ஊழியத்தில் நிலைநிற்க முடியாது .



ஊழியன் பிரதிஷ்டை உள்ளவனாய் இருக்கவேண்டும் :-

லேவியருக்கு நல்ல பிரதிஷ்டை இருந்தது . கர்த்தருடைய பட்சத்தில் நிற்கிறவன் யார் என்ற கேள்வி வந்தவுடன் நாங்கள் இருக்கிறோம் என்று கர்த்தருடைய பட்சம் சேர்ந்தார்கள் .  ஆதலால் தான் சகோதரரில் 3000 பேரை கர்த்தர் பேரில் உள்ள வைராக்கியத்தினால் வெட்டினார்கள் . 

ஏசுவும் சீஷரிடத்தில் யாதொருவன் என்னிடம் வந்து தன் தகப்பனையும் , தாயையும் , மனைவியையும்  , பிள்ளைகளையும் , சகோதரரையும் , சகோதரிகளையும் , ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்கமாட்டான் என்றார் ( மாற் 14 ; 26 ) .  அப்படி எனில் , என்ன அர்த்தம் ...? ஊழியன் கர்த்தர் மேல் வைராகியமுடையவனாய் இருக்கவேண்டும் . அப்படிப்பட்ட பிரதிஷ்டை இல்லாமல் ஊழியம் செய்யமுடியாது .



ஊழியன் சுதந்திரமில்லாதவன் :

இஸ்ரவேலரில் 12 கோத்திரத்தாருக்கும் கானானில் சென்றதும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது .  ஆனால் லேவி கோத்திரதுக்கோ சுதந்திரம் கொடுக்கப்படவில்லை  ( உபா 18 ; 1 , எண்ணா 18 : 23 ).  லேவியரின் சுதந்திரம் கர்த்தரே ( எண்ணா 18 : 20 ). பன்னிரண்டு கோத்திரத்தாரும் தங்களுக்குள்ள எல்லாவற்றிலும் இருந்து தசம பாகத்தை கர்த்தருக்கு கொடுக்கவேண்டும்  ( எண்ணா 18 : 21 ) . லேவியரோ கர்த்தருக்கு உரிய எல்லாவற்றையும் அனுபவித்து கொள்ளவேண்டும் . அவற்றை விற்கவோ , மாற்றவோ செய்யலாகாது .... ( எசே 48 : 14 , 18 )

ஆகவே ... புதிய ஏற்பாட்டு ஊழியக்காரனுக்கும் பூமியில் சுதந்திரம் இல்லை . கர்த்தரே அவன் சுதந்திரம் . பேதுரு கர்த்தரால் அழைக்கப்பட்ட போது எல்லாவற்றையும் விட்டு பின் சென்றார் ( மத் 4 ; 20 ) . சீஷர்கள் சாட்சி பகரும் போது நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோம் என்கிறார்கள் ( மத் 19 : 27 ,  லூக் 18 : 28 )


 பவுல் தனது அனுபவத்தில் பசியுள்ளவர்களும் ,. நிர்வாணிகளும் , குட்டுண்டவர்களும்  , தங்க இடமில்லாதவர்களும் என்கிறார் ( 1 கொரி 4 ; 11 ) . அதோடு தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை   ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்கலாகவும் , ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் சகலதையும் உடையவர்களாகவும் எங்களை விளங்க பண்ணுகிறோம் என்கிறார் ( II கொரி 6 : 10 , 11 )



ஊழியன் ஜலத்தில் ஸ்நானம் பண்ணி வஸ்திரம் தரிக்கவேண்டும் :-

ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனும் , அவன் குமாரரும் ஜலத்தில் ஸ்நானம் செய்து வஸ்திரம் தரித்தார்கள்  ( லேவி 8 : 6 , 9 ) . இந்த ஸ்நானம் ஜலத்தில்  ஞானஸ்நானம் எடுத்தல் ஆகும் .  கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எதனை பேர்களோ அத்தனை பேர்களும் கிறிஸ்துவை தரித்து கொண்டீர்களே  ( கலா 3 ; 27 ). உண்மையான ஊழியன் பழைய மனிதனாகிய பாவ மனிதனை சிலுவையில் அறைந்து , கொன்று ஞானஸ்நானத்திலே  அடக்கம் செய்தவனாகவும் , புதிய மனிதனாகிய கிறிஸ்துவை தரித்து கொண்டவனாய் இருக்கவேண்டும் .


ஆசாரியனுக்கு உரிய வஸ்திரங்களை அணிந்து இருக்கிறவனை கண்டவுடன் எப்படி ஆசாரியன் என்று அறிந்து கொள்ளலாமோ அப்படியே , கிறிஸ்துவை தரித்த ஊழியனின் ஜீவியம் , இவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பதை அறிவிக்க வேண்டும் . ( யோவா 13 : 35 ) . அதற்க்கு தகுந்தபடி எவ்விதத்திலும் குற்றமற்றவர்களாய் விளங்கவேண்டும் ( கொலோ 3 : 10  மற்றும் ரோம 13 : 14 )



ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்படவேண்டும்  :-

பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருவன் ராஜாவாக வேண்டுமானாலும்  ( I ராஜா 19 : 15 )  , தீர்க்கதரிசியாக வேண்டுமானாலும் ( I ராஜா 19 : 16 ) , ஆசாரியனாக வேண்டுமானாலும் ( லேவி 8 : 12 )  தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படவேண்டும் .  இந்த அபிஷேகம் எழுத்தின் படி உள்ள அபிஷேகம் .  ஆசாரியனை  தைலத்தால் அபிஷேகம் செய்தவுடன் ஆசாரிய ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டவன் என தெரியப்பட்டு ஊழியம் செய்கிறான் .  அபிஷேகம் பண்ணபடாதவனுக்கு ஊழியத்தில் உரிமை இல்லை .  அப்படி மீறி ஊழியத்தில் பிரவேசிக்கிறவன் கொல்லப்படுவான்  ( எண்ணா 3 : 10 )



புதிய ஏற்பாட்டு ஊழியமோ ஆவிக்குரிய ஊழியம் . அபிசேகமும் ஆவிக்குரிய அபிஷேகம் . இயேசு மாமிசத்தில் ஜீவித வேளை சீஷர்களை தெரிந்து எடுத்து , மூன்றரை வருடம் கூடவே வைத்து படிப்பித்தார் . சீஷர்கள் ரட்சிக்கப்பட்டு இருந்தார்கள் ( லுக் 10 : 20 ) . ஆனால் அபிஷேகம் பண்ணப்படவில்லை . அபிஷேகம் ஊழியத்திற்கு தேவையும் , முக்கியமும் ஆனபடியால் அபிசேகத்தை பெற்றுகொள்ளுமட்டும் எருசலேமை விட்டு போகாதிருங்கள் , பிதாவின் வாக்குதததிற்க்காக காத்திருங்கள் என்று இயேசு கட்டளை கொடுத்தார் ( லூக் 24 : 49 , அப்போ 1 ; 4 , 5 ).  சீஷர்கள் கர்த்தருடைய கட்டளைப்படி ஜெபத்திலும்  , வேண்டுதலிலும் தரித்து இருந்தார்கள் ( அப்போ 1 : 14 , 15 ) . பெந்தேகோஸ்தே நாளில் காத்திருந்த சீஷர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள்  ( அப்போ 2 ; 1 - 4 ) . ஆதலால் ஊழியம் செய்யவேண்டியவன் அபிஷேகம் பெற்று இருக்கவேண்டும் ..



------தொடரும்  -----------------அடுத்த பகுதியில்  " ஆசாரியன்  ஜீவிக்கவேண்டிய மாதிரி "  குறித்து சிந்திக்கும் வரை கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக ............ஆமென் ...!

திங்கள், பிப்ரவரி 27, 2012

மனுஷன் கதவை அடைத்தால் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே , ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது  அன்பின் வாழ்த்துக்கள் .



அநேகம் பேர் தங்களது வாழ்வின் அனுபவங்களை சொல்லும் பொழுது இப்படி சொல்லுவார்கள்  , " எனது வாழ்வில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது . பிசாசின் பொல்லாத சூழ்சிகள் ஒருபுறம் , மனிதர்கள் வேண்டும் என்றே செய்யும் காரியங்கள் இன்னொரு புறம் .  இப்படி எனது நன்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது ".

ஆம் பிரியமானவர்களே , மனிதன் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று கொள்ள கூடாத படிக்கு அநேகம் தடை கற்களை உங்களுக்கு முன்பாக வைத்திருக்க கூடும் .  உங்கள் சொத்தின் மேலோ , உங்கள் வேலையின் உயர்வின் மேலோ , உங்கள் குடும்பதி வளர்ச்சிக்கு முட்டுக்கடையாகவோ மனிதன் உங்கள் ஆசீர்வாத கதவை அடைத்து  வைத்திருக்கலாம் .


ஆனால் நமது தேவன் சர்வ வல்லமையுடையவர் சொல்லுகிற வார்த்தைகளை கேளுங்கள் , " உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் , உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தை கைக்கொண்ட படியால் இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் .  அதை ஒருவனும் பூட்ட மாட்டான் ..."   வெளி : 3 : 8 


ஆம் .   பிரியமானவர்களே ...உங்கள் நம்பிக்கை கெட்டு போகாது . இயேசுவை நோக்கி பார்த்த ஒருவர் முகமும் வெட்கப்பட்டு போகாது .  ஒரு புதிய திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைக்கிறார் .  விசுவாசத்துடன் இந்த பாடலையும் கேளுங்கள் .....



நீங்கள் பெற்று கொண்ட அற்புதத்தை எங்களுக்கு எழுதுங்கள் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .... ஆமென்

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம் - பகுதி 3 - கர்த்தர் லேவியரை தெரிந்தெடுத்தல்


பிரியமானவர்களே .....ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம் .  முதல் பகுதியில் ஆசரிப்பு கூடாரம் எப்படி வந்தது என்பதையும் , இரண்டாம் பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு குறித்தும் நாம் பார்த்தோம் .  இந்த பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் ஊழியத்திற்காக ஊழியரை ஆண்டவர் நியமம் செய்தது குறித்து தியானிப்போம் .

தேவ ஜனம் எகிப்தில் பார்வோனிடம் அடிமைகளாக இருந்தார்கள் .  தேவ ஆராதனை இல்லை  தேவனை ஆராதிக்க பார்வோனிடம் இருந்து ஜனத்தை விடுதலை செய்ய மோசேயை அனுப்பினார்  ( யாத்தி 3 : 12 , 5 : 1 ). பார்வோன் அவர்களை விடவில்லை . கர்த்தர் எகிப்தில் வாதைகளை அனுப்பினார் . பார்வோனின் இருதயம் கடினப்பட்டது . ஒன்பது வாதைகளை அனுப்பியும் பார்வோன் ஜனத்திற்கு விடுதலை கொடுக்கவில்லை .  பத்தாவதாக ராஜாவின் அரண்மனை முதல் ஏழைகளின் குடிசை வரையிலும் மிருக ஜீவன்களிலும் , மனிதரிலும் உள்ள முதற் பேறு அனைத்தையும் அழித்தார்.  இஸ்ரவேலரோ கர்த்தரின் கட்டளைப்படி பஸ்கா ஆடு அடித்து ரத்தத்தை வீட்டின் நிலைக்கால்களில் பூசி இருந்தபடியால் காக்கப்பட்டார்கள் . எகிப்திலே  உண்டான வாதையில் இஸ்ரவேலரின் முதற்பேறு காக்கப்பட்ட படியால் , இஸ்ரவேலரின் முதற் பேறு அனைத்தும் எனக்குரியது என கர்த்தர் கட்டளை இட்டு இருந்தார் .  ( யாத் 13 : 1 , 2 ) .  இவ்விதம் முதற் பேறு அனைத்தும் கர்த்தருடையதே....!


 இவ்வாறு எகிப்தில் இருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் இஸ்ரவேலர் சீனாய் மலை அருகில் வந்தார்கள் .  கர்த்தர் தமது ஜனம் தம்மை சேவிக்க வேண்டிய விதம் , கைக்கொள்ளவேண்டிய கற்பனை முதலியவற்றை கொடுக்க , மோசேயை மலை உச்சிக்கு அழைத்தார் . மோசே பிரமாணத்தை வாங்கும் படியாக மலைக்கு சென்றார் . மோசே திரும்பி வர 40 நாட்கள் ஆகி விட்டது .  ஜனங்களோ  ஆரோனிடம் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . " எகிப்து தேசத்தில் இருந்து நம்மை அழைத்து வந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ ? அறியோம் .  ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன் நடக்கும் தெய்வங்களை உண்டுபண்ணவேண்டும் " என்று வேண்டினார்கள் .  உடனே ஆரோன் , " உங்கள் காதணிகளை கொண்டு வாருங்கள் ' என்று கட்டளையிட்டான் . அவர்கள் காதணிகளை கொடுத்தார்கள் . அதினால் ஒரு கன்று குட்டி தெய்வத்தை உண்டுபண்ணி கொடுத்தான் . அவர்கள் அதை ஆராதித்தார்கள் .

அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ இறங்கி போ ! எகிப்து தேசத்தில் இருந்து நீ அழைத்து கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களை கெடுத்து கொண்டார்கள் என்றார் . மோசே வந்து பார்க்கும் போது ஜனங்கள் கன்று குட்டி தெய்வத்தை வணங்கி நடனம் பண்ணுவதை கண்டான் .  மோசே கோபம் மூண்டவனாய் கன்று குட்டி தெய்வத்தை அக்கினியால் சுட்டு அரைத்து ஜனங்களை குடிக்க செய்தான் ( யாத் 32 : 20 )



பின்னர் மோசே  சகல ஜனங்களையும் பார்த்து கர்த்தருடைய பட்சத்தில் நிற்ப்பவன் யார் ? அவர்கள் என்னண்டை வரக்கடவர்கள் என்றான்  ( யாத் 32 ; 26 ). உடனே லேவி கோத்திரத்தார் மோசேயிடம் சென்றார்கள் . அப்பொழுது மோசே கர்த்தரின் கட்டளைப்படி அவனவன் தன் தன் சகோதரனையும் தன் தன் அயலானையும் கொன்று போடகடவன் என்றான்  ( யாத் 32 ; 27 ) .  உடனே லேவியர் பட்டயத்தை உருவி அன்றைய தினம் 3000 பேரை கொன்றார்கள் .



இவ்விதம் தேவ கட்டளைப்படி லேவியர் , சகோதரர் என்று பாராமல் பட்டயத்தை உருவி வெட்டினபடியால் லேவியரை தமக்கென்றும் , தம்முடைய ஊழியத்திற்கு என்றும் கர்த்தர் பிரித்து எடுத்து கொண்டார் ( உபா 33 : 8 , 10 )



ஆகவே இக்காரணத்தால் , எகிப்தில் இருந்து புறப்பட்ட வேளை சகல இஸ்ரவேலிலும் முதற்பேறு தமக்குரியது என்று சொல்லியதை நினைத்து அதற்க்கு பதிலாக லேவியரை முதற்பேறாக நியமித்து கொண்டார் ( எண் 3 : 12 , 13 ; எண் 8 : 18 )  இவ்விதமாய் லேவியர் தேவனுடைய ஊழியத்திற்கு என்று வேறு பிரிக்கப்பட்டார்கள் .



லேவியின் வரலாறு :  இவர் யாக்கோபின் மூன்றாவது குமாரன்  ( ஆதி 35 : 23 ) . யாக்கோபு பதான் அராமில் தனது மாமனாரின் வீட்டில் 20 வருடம் தங்கினார் . பின்னர் யாக்கோபு தகப்பன் வீட்டிற்கு சென்றார் . போகிற வழியில் சாலேம் என்னும் சீகேம் பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டார் ( ஆதி 33 : 18 ).  அங்கிருக்கும் போது யாக்கோபின் மகள் தீனாள் தேசத்து பெண்களை பார்க்க போனாள்.  அப்பொழுது சீகேம் தீனாளை கண்டு இச்சித்து தீட்டுப்படுத்தினான் . இதினால் யாக்கோபின் பிள்ளைகளுக்கு கோபம் உண்டாயிற்று .  எனவே யாக்கோபின் பிள்ளைகளான சிமியோனும் , லேவியும் தங்கள் பட்டயத்தை உருவி அவ்வூர் வாலிபர் அனைவரையும் கொன்று போட்டார்கள் .  ( ஆதி 34 : 25 ) . இந்த காரணத்தால் யாக்கோபு தனது கடைசி காலத்தில் சிமியோனையும் , லேவியையும் சபித்தார் .  ( ஆதி 49 : 5 , 7 ) .  இவாறு லேவி சபிக்கப்பட்டவன் ..



ஆனால் சாபதிற்க்குள்ளான லேவி சந்ததியார் ,  கர்த்தருக்காக கர்த்தருடைய பட்சத்தில் வைராக்கியமாய் நின்றதால் சாபத்தை போக்கி ஆசிர்வாதத்தை பகிர்ந்து கொள்ள , கர்த்தர் அவனை கனமான ஊழியத்திற்கு பாத்திரமாக்கினார் .   

 நீங்கள் யாருடைய பக்கம் .....?



-------------------தொடரும்  ------------------. அடுத்த பதிவில் " எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் .?" என்பதை நாம் பார்க்கலாம் .  கர்த்தரின் கிருபை நம்மோடு இருப்பதாக ......ஆமென் 

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம்


தேவனால் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமும் , ஏவாளும் தேவ கட்டளையை மீறின படியால்  , ஏதேன் தோட்டத்திற்கு புறம்பே தள்ளப்பட்டனர் . அதன் பின்னர் ஆதாமுக்கு காயீன் , ஆபேல் என்னும் இரு குமாரர் பிறந்தார்கள் . இவர்கள் வளர்ந்து வரவே தேவனுக்கு காணிக்கை செலுத்த சென்றனர் ( ஆதி 3 , 4 அதி ). வேத புத்தகத்தில் முதலாவது தேவனுக்கு காணிக்கை செலுத்தினதாக காண்பது இதுவே .  காணிக்கை செலுத்துவது என்பது தேவனை ஆராதிப்பதே ..  காயீனின் காணிக்கையை தேவன் ஏற்று கொள்ளாததால் காயீன் எரிச்சல் கொண்டு சகோதரன் ஆபேலை கொன்றான் . ஆபேல் மரிக்கவும் ஆதாமுக்கு ஆபேலுக்கு பதிலாக சேத் பிறந்தான் . சேத்துக்கு ஏனோஸ் பிறந்தார் . சேத் பிறக்கவும் ஆராதனை திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது .
 
 

ஆதாம் உண்டாக்கப்பட்டு 1500 வருடம் ஆகும் போது , பூமியில் ஜனம் திரளாய் பெருகி இருந்தனர் .  ஆனால் உண்மையான ஆராதனையோ இல்லாமல் போயிற்று .  அக்காலத்தில் நோவாவின் வீட்டார் மாத்திரம் உண்மையாய் கர்த்தரை சேவித்து வந்தனர் .  ஆதலால் கர்த்தர் நோவாவின் குடும்பத்தை காப்பாற்றி ஜனத்தை அளிக்க சித்தம் கொண்டார் .  அப்படியே கிமு 1656 ம வருடம் ஜலப்பிரளயம் வந்து ஜனசமுதாயம் அழிக்கப்பட்டது.
 
 

ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் நோவா தேவனுக்கு பலியிட்டு தேவனை ஆராதித்தார் ( ஆதி 8 ; 20 ) . இந்த ஆராதனையும் பின்னர் இல்லாமற் போயிற்று . ஜலப்பிரளயதிர்க்கு பின்னர் 367 ம வருடம் வரவே தேவ ஆராதனை முற்றிலும் அற்று போய் விக்கிரக ஆராதனை உண்டாயிற்று . அப்படி விக்கிரகங்களை ஆராதித்த ஆபிரகாமை கர்த்தர் அழைத்தார்  ( யோசுவா 24 : 2  ).  ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கு இசைந்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தார் .  ஆபிரகாம் கூடாரவாசியாய் இருந்தும் போன போன இடங்களில் எல்லாம் கர்த்தரை ஆராதித்தார் . (  ஆதி 13 ; 4 , 18   ;  ஆதி 15 : 9 - 12 ).  ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு பலிபீடங்களை கட்டி கர்த்தரை ஆராதித்தார் ( ஆதி 26 : 25 ).  பின்னர் ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபும் ஆராதனை நடத்தினார் ( ஆதி 35 : 7 , 8  )
 
 

கர்த்தர் ஆபிரகாமிடத்தில் உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் பரதேசிகளாய் இருந்து 400 வருடம் உபத்திரப்படுவார்கள் .  நாலாம் தலைமுறையில் விடுதலை அடைந்து வாக்குதத்தம்  பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்கு திரும்ப வருவார்கள் என்றும் சொன்னார் ( ஆதி 15 : 13 - 16 ). இந்த தீர்க்க தரிசனத்தின் படி யாக்கோபின் 130 வது வயதில் ஆபிரகாமின் சந்ததி எகிப்துக்கு போனார்கள் ( ஆதி 47  : 9  ).  நான்காம் தலைமுறை வரும் பொழுது கர்த்தர் அவர்களை விடுவிக்க சித்தம் கொண்டார் .  நான்கு தலைமுறைகலாவன :-  எகிப்துக்கு போனவர்களில் ஒருவன் லேவி .  அவன் மகன் கோகாத் .  அவர் மகன் அம்ராம் .  அவர் மகன் மோசே .  மோசே நான்காம் தலைமுறை காரன் . அவரே இஸ்ரவேலை கானானுக்கு வழிநடத்தினவர்  ( I நாளா 6 ; 1 - 3 )
 
 

இந்த அடிமைத்தன காலத்தில் தேவ ஆராதனை முற்றிலுமாய் நின்று போய் இருந்தது .  ஆதலால் திரும்பவும் இஸ்ரவேல் கர்த்தரை சேவிப்பதற்காக கானானுக்கு கர்த்தர் வழிநடத்தினார் .  எகிப்து தேசத்தில் இருந்து சீனாய் மலை அருகில் வரவும்  , கர்த்தர் சீனாய் மலைக்கு மோசேயை அழைத்தார் . அம்மலையில் வைத்து கர்த்தரை ஆராதிக்க வேண்டிய மாதிரி , கைக்கொள்ள வேண்டிய கட்டளை யாவையும் கர்த்தர் மோசேக்கு கற்ப்பித்து கொடுத்தார் .  இவ்விதமாய் தம்மை ஆராதிப்பதற்க்காக மோசேக்கு கர்த்தர் காட்டி கொடுத்த கூடாரம் தான் ஆசரிப்பு கூடாரம் ...


------- தொடரும் --------------
 

சனி, பிப்ரவரி 11, 2012

நிறைவேற்றுகிற தேவன் - செய்தியின் காணொளி



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே .... 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் ....

என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை , எப்பொழுது தான் எனக்கு ஒரு வழி திறக்கும் என்று நினைக்கிறீர்களா ...? விசுவாசத்துடன் இந்த செய்தியை கேளுங்கள் ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ....



உங்கள் ஜெப தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அஞ்சிடேன் ....... இனி நான் அஞ்சிடேன் .....

அச்சம் என்ற உணர்வு மனிதன் வாழ்வில் பல தருணங்களில் அவனை நிம்மதியாக வாழ விடாமல் செய்து விடுகிறது .  எதிர்கால வாழ்வை குறித்த பயம்  , நோயை குறித்த பயம் , சாபத்தை குறித்த பயம் , பிசாசின் கிரியை குறித்த பயம் ..... இப்படி பல பயங்கள்.....

ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது ..... நீங்கள் பயப்படாதிருங்கள் ....! நான் உங்களுடன் கூட இருக்கிறேன் .... ஆம் ...பிரியமானவர்களே .... கர்த்தராகிய இயேசுவை நீங்கள் சார்ந்து கொள்ளும் போது , அவர் உங்களிடமாய் கடந்து வரும் பொழுது நீங்கள் ஏன் பயப்படவேண்டும் ....?

இந்த பாடலை விசுவாசத்துடன் கேளுங்கள் .... கர்த்தர் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்வார் ......




உங்களின் கருத்துகள்  , ஜெபதேவைகள் எதுவானாலும் எங்களுக்கு எழுதலாம் .... உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... ஆமென் 


திங்கள், ஜனவரி 16, 2012

ஏன் நீ கலங்கவேண்டும் ...?


சில மாதங்களுக்கு முன்பு எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது மனித வாழ்வில் நிகழும் எதிர்பாராத சில காரியங்களையும் அதனால் மனிதனுக்கு ஏற்படுகிற துயரமான சில தருணங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டது .  சில வேளைகளில் ஏன் மனிதன் கலங்கி போகிறான் என்று ஒரு கேள்வி கேட்டால் ,  சிலர் சொல்லுகிறார்கள் , " எதிர்பாராத இழப்பினால் கலங்கி போய் விட்டோம் " என்றும் , சிலர் சொல்லுகிறார்கள் , " எனக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லை என்பதை நினைக்கும் போது என்னால் எப்படி கலங்காமல் இருக்க முடியும் ?" என்று . 




 பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 42 : 5  மற்றும் 12  வசனங்களை வாசிக்கும் போது , வேதம் சொல்லுகிறது , " என ஆத்துமாவே , நீ ஏன் கலங்குகிறாய் ? ஏன் எனக்குள் தியங்குகிறாய் ? தேவனை நோக்கி காத்திரு "


எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் கவனித்து பாருங்கள் .  உங்களை நேசிக்கும் , உங்களுக்காக பரிதபிக்கும் , உங்களுக்காகவே இந்த உலகத்தில் வந்த ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது , நீங்கள் கலங்கவேண்டிய அவசியம் என்ன ?


எபிரெயர் 2 : 18  சொல்லுகிறது , " அவர்தாமே சோதிக்கப்ப்பட்டு பாடுபட்டதினாலே , அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார் "  ஆம் .. பிரியமானவர்களே .., உங்கள் சோதனையில் உங்களுக்கு உதவி செய்வதற்காக சிலுவை பாடுகளை ஏற்றுகொண்ட ஒரு அன்பின் தெய்வம் உங்களுக்கு இருக்கிறார் .


I பேதுரு 5 : 7  சொல்லுகிறது , " அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் "  உங்களை கனிவுடன் விசாரித்து , உங்கள் கண்ணீருக்கு பதில் கொடுக்கும் ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது நீங்கள் கலங்கவேண்டிய காரணம் என்ன ..?


பிரியமானவர்களே , கவலைப்படாதிருங்கள் ... நீங்கள் சில காரியங்களை இழந்து போய் இருக்கலாம் , சில காரியங்கள் உங்களுக்கு எதிராய் இருக்கலாம் . சில மனிதர்கள் உங்களுக்கு விரோதமாக பேசி கொண்டே இருக்கலாம் . கடுமையான போராட்டங்கள் உங்கள் வாழ்வின் நிம்மதியை அழித்து உங்களை கலங்க செய்யலாம் .  கல்வாரி சிலுவை பரியந்தம் உங்களுக்காக பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி உங்களுக்காக ஜீவனை தந்த அன்பின் தேவன் இயேசு உங்களுக்காக இருக்கிறார் .  அவரை நோக்கி பாருங்கள் .  உங்கள் கலக்கத்திற்கு பதிலாக உங்களை களிப்பினால் நிரப்புவார் .


 ஒரு சிறிய ஜெபத்தை நாம் செய்வோமா ...?

அன்பின் பரலோக தகப்பனே , நீர் எங்களுக்காக இந்த உலகில் வந்து எங்களுக்காக மரித்து , மறுபடியும் உயிர்த்து பரலோகத்தில் எங்களுக்காக பரிந்து பேசுகிறீர் என்பதை நாங்கள் விசுவாசிக்க்றோம் .  இப்பொழுதும் எங்களின் இந்த கலக்கமான சூழ்நிலையில் எங்கள் உள்ளத்தில் நீர் கடந்து வரும் படி உம்மை நாங்கள் அழைக்கிறோம் .  இயேசு கிறிஸ்துவே , உலகம் தரமுடியாத உமது சமாதானத்தை நீர் எங்களுக்கு தாரும் . உமது ரத்தத்தினால் எங்களை கழுவும் .  நீர் உமது சந்தோசத்தை எங்களுக்கு தருவதினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே .... ஆமென் .


பிரியமானவர்களே ... கலங்காதிருங்கள் ... கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் .  ஆமென் .

புதன், ஜனவரி 11, 2012

ஆசீர்வாதமாய் இருக்க வேண்டுமா ....?

உலகம் முழுவதும் உள்ள ஜனங்கள் ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள் .  தவறில்லை . ஆசீர்வாதமாய் வாழவேண்டும் என்பதற்காக சிலர் புண்ணிய யாத்திரைகள் , சிலர் நேர்ச்சைகள் , சிலர் மந்திரங்கள் என்று பல வழிகளை முயற்சிக்கிறார்கள் .  ஆனால் உண்மையான ஆசீர்வாதத்தை நாம் பெற்று கொள்ள வேண்டுமானால் சில வழிமுறைகள் உள்ளது .


பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் "  - மத்தேயு 6 : 33

உலகத்தின் பெரும் ஜனக்கூட்டம் பெரும் செல்வதை தேடி தான் ஓடி கொண்டு இருக்கிறது .  ஆனால் பெரும்பாலும் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் தான் . காரணம் என்னவெனில் அவர்களின் தேடுதல் , ஓட்டம் எல்லாம் ஆசீர்வாதங்களை நோக்கி தானே தவிர , ஆசீர்வாதங்களை கொடுக்க வல்லமை உள்ள தேவனை நோக்கி அல்ல ....

 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்படிஎன்றால் என்ன அர்த்தம் .   வேதம் சொல்லுகிறது , " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது ".  அப்படி என்றால் என்ன அர்த்தம் ...?  பாவத்திற்கு செத்து , நீதிக்கு என்று பிழைக்கிற அனுபவம் . பாவத்திற்கு எப்படி சாக முடியும் ...? பாவத்தை மன்னிக்க வல்லமை உள்ள இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் போதிக்கிறது .  அப்படி என்றால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது சொந்த ரட்சகராக மாற வேண்டும் .  அவர் ஒருவரே நமது இதயத்தின் ஏக்கம் , நோக்கம் எல்லாம் ஆக இருக்க வேண்டும் .


அந்த இயேசு நமது உள்ளத்தில் வரும் போது , என்ன நடக்கும் தெரியுமா ..? . 
வேதம் சொல்லுகிறது , " அவர் நமது குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றுவார் ". 
சங்கீதம் 128  சொல்லுகிறது , " கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ , அவன் பாக்கியவான் .  உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் .  உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாயிருக்கும் ."

பிரியமானவர்களே ... உங்கள் வாழ்கையில் நமக்காக இந்த உலகத்தில் வந்த தேவனுக்கு முதல் இடம் கொடுங்கள் . அவர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார் . உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாய் மாற்றி , நீங்கள் வாழும் இந்த பூமியில்  , உங்கள் சத்துருக்களுக்கு மத்தியில் ஒரு பந்தியை உங்களுக்கு ஆயத்தம் பண்ணி , உங்களை அபிஷேகித்து , உங்கள் வாழ்கையை நிரம்பி வழிய செய்து  , நன்மையால் உங்களை திருப்தி ஆக்குவார்.  பெரிய காரியங்களை எதிர்பாருங்கள் .  ஏசுவுக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணிப்போம் . ஆமென்

ஞாயிறு, ஜனவரி 08, 2012

தைரியமாயிருங்கள் ......


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதர  , சகோதரிகளுக்கு  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .....

இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் , ஏதோ ஒரு நிலையில்  , எதையோ நினைத்து பயந்து போய் இருக்கிறார்கள் .  சிலர் வியாதியை நினைத்து ...... சிலர் எதிர் காலத்தை நினைத்து ...... சிலர் கடும் கடன் பிரச்சினையை நினைத்து .......இன்னும் சிலர் தொடரும் போராட்டங்களை நினைத்து ...... பயம் ... பயம் ......


 உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை இன்று ஆண்டவர் தருகிறார் ...."தைரியமாயிருங்கள்".   ஆமென்

 பிரியமானவர்களே எப்படி நம்மால் தைரியம் அடையமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம் .  சில வழிகளை பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது .

இயேசுவின் ரத்தத்தினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 10  : 20  சொல்லுகிறது ,  " ....... அவருடைய  ( இயேசுவின் ) இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாகிறது" .    வானத்தையும் , பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமை உள்ள தேவன் இந்த உலகில் மனிதனாக பிறந்து உனக்காகவும் எனக்காகவும் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினார் .   அந்த ரத்தத்தை குறித்து எபிரேயர் 12  : 24   சொல்லுகிறது...." நன்மையானவைகளை பேசுகிற இரத்தம் .... " என்று .   ஆம் .. பிரியமானவர்களே , இந்த உலகத்தில் உனக்காக யாரும் பரிந்து பேச இல்லாத காரணத்தினால் ஒரு வேளை நீ சோர்ந்து போய் இருக்கலாம் .  கர்த்தர் சொல்லுகிறார் , "  உனக்காக பரிந்து பேசுவதற்காகவே என் இரத்தத்தை நான் சிந்தியுள்ளேன் ....தைரியமாயிருங்கள்".    ஆமென் .


வாக்குதததினால்  :   ஆம் பிரியமானவர்களே ,  எபிரேயர் 13 : 5 , 6   சொல்லுகிறது, " .... நான் உன்னை விட்டு விலகுவதில்லை  , உன்னை கைவிடுவதில்லை என்று சொல்லி இருக்கிறாரே . அதினால் நாம் தைரியம் கொண்டு : கர்த்தர் எனக்கு சகாயர் , நான் பயப்படேன் , மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே ".    எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் பாருங்கள் .  மனிதனின் வாரத்தைகள் ஒருவேளை மாறி போய்விடலாம் . ஆனால் வாக்கு மாறாத தேவனின் வாரத்தைகளை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது , " வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் என் வாரத்தைகள் மாறாது " என்று .  இன்னும் ஒரு பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது , " தேவன் பொய் சொல்ல மனுஷன் அல்ல , மனம் மாற மனுபுத்திரனும் அல்ல , அவர் சொல்லியும் செயாதிருப்பாரோ ? ".   என் கலங்குகிறீர்கள் .  அவர் உங்களுக்கு சொன்ன வார்த்தை மாறாதது .  தைரியமாயிருங்கள்.  அவரின் வார்த்தையை பிடித்து கொள்ளுங்கள் .  பயம் உங்களை விட்டு ஓடி போகும் .


ஒரு சிறிய ஜெபத்தை விசுவாசத்தோடு செய்வோமா ...!
அன்புள்ள ஏசுவே , எங்கள் பரம தகப்பனே  , நீர்  தேவன் என்றும் , நீர் எனக்காக இந்த உலகத்தில் பிறந்து எனக்காக இரத்தம் சிந்தி மரித்து , மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய இரத்தம் எனக்காக பரிந்து பேசுகிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  உம்முடைய வாக்குகள் மாறாதது என்பதை நான் விசுவாசிக்கிறேன் .  ஏசுவே ... என் உள்ளத்தில் நீர் வந்து வாசம் பண்ணும் .  என் காரியங்களை எல்லாம் பொறுப்பெடுத்து கொள்ளும் .  விசுவாசத்தினால் உண்டாகும் தைரியத்தினால் என்னை நிரப்பும் .  உம்முடைய நாமத்தை என் வாழ்வில் மகிமை படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே ..... ஆமென் ..


பிரியமானவர்களே ....தைரியமாயிருங்கள். உங்கள் காரியம் ஜெயமாய் மாறும் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ...