வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஆசரிப்பு கூடாரம் - வேத பாடம் - பகுதி 3 - கர்த்தர் லேவியரை தெரிந்தெடுத்தல்


பிரியமானவர்களே .....ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம் .  முதல் பகுதியில் ஆசரிப்பு கூடாரம் எப்படி வந்தது என்பதையும் , இரண்டாம் பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு குறித்தும் நாம் பார்த்தோம் .  இந்த பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் ஊழியத்திற்காக ஊழியரை ஆண்டவர் நியமம் செய்தது குறித்து தியானிப்போம் .

தேவ ஜனம் எகிப்தில் பார்வோனிடம் அடிமைகளாக இருந்தார்கள் .  தேவ ஆராதனை இல்லை  தேவனை ஆராதிக்க பார்வோனிடம் இருந்து ஜனத்தை விடுதலை செய்ய மோசேயை அனுப்பினார்  ( யாத்தி 3 : 12 , 5 : 1 ). பார்வோன் அவர்களை விடவில்லை . கர்த்தர் எகிப்தில் வாதைகளை அனுப்பினார் . பார்வோனின் இருதயம் கடினப்பட்டது . ஒன்பது வாதைகளை அனுப்பியும் பார்வோன் ஜனத்திற்கு விடுதலை கொடுக்கவில்லை .  பத்தாவதாக ராஜாவின் அரண்மனை முதல் ஏழைகளின் குடிசை வரையிலும் மிருக ஜீவன்களிலும் , மனிதரிலும் உள்ள முதற் பேறு அனைத்தையும் அழித்தார்.  இஸ்ரவேலரோ கர்த்தரின் கட்டளைப்படி பஸ்கா ஆடு அடித்து ரத்தத்தை வீட்டின் நிலைக்கால்களில் பூசி இருந்தபடியால் காக்கப்பட்டார்கள் . எகிப்திலே  உண்டான வாதையில் இஸ்ரவேலரின் முதற்பேறு காக்கப்பட்ட படியால் , இஸ்ரவேலரின் முதற் பேறு அனைத்தும் எனக்குரியது என கர்த்தர் கட்டளை இட்டு இருந்தார் .  ( யாத் 13 : 1 , 2 ) .  இவ்விதம் முதற் பேறு அனைத்தும் கர்த்தருடையதே....!


 இவ்வாறு எகிப்தில் இருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் இஸ்ரவேலர் சீனாய் மலை அருகில் வந்தார்கள் .  கர்த்தர் தமது ஜனம் தம்மை சேவிக்க வேண்டிய விதம் , கைக்கொள்ளவேண்டிய கற்பனை முதலியவற்றை கொடுக்க , மோசேயை மலை உச்சிக்கு அழைத்தார் . மோசே பிரமாணத்தை வாங்கும் படியாக மலைக்கு சென்றார் . மோசே திரும்பி வர 40 நாட்கள் ஆகி விட்டது .  ஜனங்களோ  ஆரோனிடம் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . " எகிப்து தேசத்தில் இருந்து நம்மை அழைத்து வந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ ? அறியோம் .  ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன் நடக்கும் தெய்வங்களை உண்டுபண்ணவேண்டும் " என்று வேண்டினார்கள் .  உடனே ஆரோன் , " உங்கள் காதணிகளை கொண்டு வாருங்கள் ' என்று கட்டளையிட்டான் . அவர்கள் காதணிகளை கொடுத்தார்கள் . அதினால் ஒரு கன்று குட்டி தெய்வத்தை உண்டுபண்ணி கொடுத்தான் . அவர்கள் அதை ஆராதித்தார்கள் .

அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ இறங்கி போ ! எகிப்து தேசத்தில் இருந்து நீ அழைத்து கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களை கெடுத்து கொண்டார்கள் என்றார் . மோசே வந்து பார்க்கும் போது ஜனங்கள் கன்று குட்டி தெய்வத்தை வணங்கி நடனம் பண்ணுவதை கண்டான் .  மோசே கோபம் மூண்டவனாய் கன்று குட்டி தெய்வத்தை அக்கினியால் சுட்டு அரைத்து ஜனங்களை குடிக்க செய்தான் ( யாத் 32 : 20 )



பின்னர் மோசே  சகல ஜனங்களையும் பார்த்து கர்த்தருடைய பட்சத்தில் நிற்ப்பவன் யார் ? அவர்கள் என்னண்டை வரக்கடவர்கள் என்றான்  ( யாத் 32 ; 26 ). உடனே லேவி கோத்திரத்தார் மோசேயிடம் சென்றார்கள் . அப்பொழுது மோசே கர்த்தரின் கட்டளைப்படி அவனவன் தன் தன் சகோதரனையும் தன் தன் அயலானையும் கொன்று போடகடவன் என்றான்  ( யாத் 32 ; 27 ) .  உடனே லேவியர் பட்டயத்தை உருவி அன்றைய தினம் 3000 பேரை கொன்றார்கள் .



இவ்விதம் தேவ கட்டளைப்படி லேவியர் , சகோதரர் என்று பாராமல் பட்டயத்தை உருவி வெட்டினபடியால் லேவியரை தமக்கென்றும் , தம்முடைய ஊழியத்திற்கு என்றும் கர்த்தர் பிரித்து எடுத்து கொண்டார் ( உபா 33 : 8 , 10 )



ஆகவே இக்காரணத்தால் , எகிப்தில் இருந்து புறப்பட்ட வேளை சகல இஸ்ரவேலிலும் முதற்பேறு தமக்குரியது என்று சொல்லியதை நினைத்து அதற்க்கு பதிலாக லேவியரை முதற்பேறாக நியமித்து கொண்டார் ( எண் 3 : 12 , 13 ; எண் 8 : 18 )  இவ்விதமாய் லேவியர் தேவனுடைய ஊழியத்திற்கு என்று வேறு பிரிக்கப்பட்டார்கள் .



லேவியின் வரலாறு :  இவர் யாக்கோபின் மூன்றாவது குமாரன்  ( ஆதி 35 : 23 ) . யாக்கோபு பதான் அராமில் தனது மாமனாரின் வீட்டில் 20 வருடம் தங்கினார் . பின்னர் யாக்கோபு தகப்பன் வீட்டிற்கு சென்றார் . போகிற வழியில் சாலேம் என்னும் சீகேம் பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டார் ( ஆதி 33 : 18 ).  அங்கிருக்கும் போது யாக்கோபின் மகள் தீனாள் தேசத்து பெண்களை பார்க்க போனாள்.  அப்பொழுது சீகேம் தீனாளை கண்டு இச்சித்து தீட்டுப்படுத்தினான் . இதினால் யாக்கோபின் பிள்ளைகளுக்கு கோபம் உண்டாயிற்று .  எனவே யாக்கோபின் பிள்ளைகளான சிமியோனும் , லேவியும் தங்கள் பட்டயத்தை உருவி அவ்வூர் வாலிபர் அனைவரையும் கொன்று போட்டார்கள் .  ( ஆதி 34 : 25 ) . இந்த காரணத்தால் யாக்கோபு தனது கடைசி காலத்தில் சிமியோனையும் , லேவியையும் சபித்தார் .  ( ஆதி 49 : 5 , 7 ) .  இவாறு லேவி சபிக்கப்பட்டவன் ..



ஆனால் சாபதிற்க்குள்ளான லேவி சந்ததியார் ,  கர்த்தருக்காக கர்த்தருடைய பட்சத்தில் வைராக்கியமாய் நின்றதால் சாபத்தை போக்கி ஆசிர்வாதத்தை பகிர்ந்து கொள்ள , கர்த்தர் அவனை கனமான ஊழியத்திற்கு பாத்திரமாக்கினார் .   

 நீங்கள் யாருடைய பக்கம் .....?



-------------------தொடரும்  ------------------. அடுத்த பதிவில் " எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் .?" என்பதை நாம் பார்க்கலாம் .  கர்த்தரின் கிருபை நம்மோடு இருப்பதாக ......ஆமென் 

4 கருத்துகள்:

  1. என்ன காரணத்துக்காக கர்த்தர் அவனவன் தன் தன் சகோதரனையும் தன் தன் அயலானையும் கொன்று போட சொனார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோதரருக்கு , இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .

      தங்களின் கேள்வி மிக சிறந்த ஒரு கேள்வி. ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து என்னும் தேசத்தில் இருந்து விடுவித்து தம்மை ஆராதிப்பதர்க்காக பல அற்புதங்களை செய்து அழைத்து கொண்டு வந்தார் . குறிப்பாக பஸ்கா ஆட்டுக்குட்டியின் ரத்தம் ( இயேசு கிறிஸ்துவின் ரத்தத்திற்கு உவமானம் ) அவர்கள் வீட்டின் மேல் தெளிக்கப்பட்டு இருந்த படியினால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .

      இந்த நிலையில் , அவரை அறிந்து கொண்ட ஜனங்கள் அவரை ஆசரிக்க வேண்டிய முறைமைகளை பிரமாணமாக யாத்திராகமம் 20 ம் அதிகாரத்தில் கொடுத்தார் ,. அதில் மிகவும் முக்கியமானது " என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்கவேண்டாம் , மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் , பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபதையாகிலும் , யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் . நீ அவைகளை நமஸ்கரிக்கவும் , சேவிக்கவும் வேண்டாம் " என்பதே யாத் : 20 : 3 - 5

      விக்கிரக ஆராதனை தேவனுடைய பார்வையில் மிகவும் அருவருப்பானது , மேலும் ஜனங்கள் தங்களை பரிசுத்த பண்ணின பஸ்காவின் ரத்தத்தை அலட்சியம் பண்ணி விட்டார்கள் . எனவே தேவ கோபாக்கினை அவர்கள் மேல் வந்து விட்டது .

      மேலும் , கிருபையின் காலமாகிய இந்த காலத்திலும் மேற்கண்ட சத்தியத்திற்கு ஒப்பாக எபிராயர் 10 : 26 சொல்லுகிறது , " சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்களாய் இருந்தால் , பாவங்களிநிமிதம் செலுத்த தக்க வேறு ஒரு பலி இராமல் , நியாயதீர்ப்பு இருக்கும் ........"

      எபி 10 : 29 சொல்லுகிறது , :" தேவனுடைய குமாரனை காலின் கீழ் மிதித்து , தன்னை பரிசுத்த செய்த உடன்படிக்கையின் ரத்தத்தை அசுத்தம் என்று எண்ணி , கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்கு பாதிரவானாய் இருப்பான் ".

      எனவே தான் தேவன் பாவத்திற்கு தண்டனை கொடுத்தார் . ஆனால் இந்த கிருபையின் காலத்தில் அவரிடத்தில் வருகிற யாவருக்கும் மீட்ப்பு உண்டு. ஆமென் ...

      God Bless you

      நீக்கு
    2. இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் . நன்றி சகோதரரே. விளங்கிக் கொண்டேன்

      நீக்கு
    3. சகோ .... வர்ருங்கள் .....

      ஆண்டவர் இயேசுவின் நாம் மகிமைப்படுவதாக .... ஆமென்

      நீக்கு