பிரியமானவர்களே .....ஆசரிப்பு கூடாரத்தை குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம் . முதல் பகுதியில் ஆசரிப்பு கூடாரம் எப்படி வந்தது என்பதையும் , இரண்டாம் பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு குறித்தும் நாம் பார்த்தோம் . இந்த பகுதியில் ஆசரிப்பு கூடாரத்தின் ஊழியத்திற்காக ஊழியரை ஆண்டவர் நியமம் செய்தது குறித்து தியானிப்போம் .
தேவ ஜனம் எகிப்தில் பார்வோனிடம் அடிமைகளாக இருந்தார்கள் . தேவ ஆராதனை இல்லை தேவனை ஆராதிக்க பார்வோனிடம் இருந்து ஜனத்தை விடுதலை செய்ய மோசேயை அனுப்பினார் ( யாத்தி 3 : 12 , 5 : 1 ). பார்வோன் அவர்களை விடவில்லை . கர்த்தர் எகிப்தில் வாதைகளை அனுப்பினார் . பார்வோனின் இருதயம் கடினப்பட்டது . ஒன்பது வாதைகளை அனுப்பியும் பார்வோன் ஜனத்திற்கு விடுதலை கொடுக்கவில்லை . பத்தாவதாக ராஜாவின் அரண்மனை முதல் ஏழைகளின் குடிசை வரையிலும் மிருக ஜீவன்களிலும் , மனிதரிலும் உள்ள முதற் பேறு அனைத்தையும் அழித்தார். இஸ்ரவேலரோ கர்த்தரின் கட்டளைப்படி பஸ்கா ஆடு அடித்து ரத்தத்தை வீட்டின் நிலைக்கால்களில் பூசி இருந்தபடியால் காக்கப்பட்டார்கள் . எகிப்திலே உண்டான வாதையில் இஸ்ரவேலரின் முதற்பேறு காக்கப்பட்ட படியால் , இஸ்ரவேலரின் முதற் பேறு அனைத்தும் எனக்குரியது என கர்த்தர் கட்டளை இட்டு இருந்தார் . ( யாத் 13 : 1 , 2 ) . இவ்விதம் முதற் பேறு அனைத்தும் கர்த்தருடையதே....!
இவ்வாறு எகிப்தில் இருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் இஸ்ரவேலர் சீனாய் மலை அருகில் வந்தார்கள் . கர்த்தர் தமது ஜனம் தம்மை சேவிக்க வேண்டிய விதம் , கைக்கொள்ளவேண்டிய கற்பனை முதலியவற்றை கொடுக்க , மோசேயை மலை உச்சிக்கு அழைத்தார் . மோசே பிரமாணத்தை வாங்கும் படியாக மலைக்கு சென்றார் . மோசே திரும்பி வர 40 நாட்கள் ஆகி விட்டது . ஜனங்களோ ஆரோனிடம் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . " எகிப்து தேசத்தில் இருந்து நம்மை அழைத்து வந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ ? அறியோம் . ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன் நடக்கும் தெய்வங்களை உண்டுபண்ணவேண்டும் " என்று வேண்டினார்கள் . உடனே ஆரோன் , " உங்கள் காதணிகளை கொண்டு வாருங்கள் ' என்று கட்டளையிட்டான் . அவர்கள் காதணிகளை கொடுத்தார்கள் . அதினால் ஒரு கன்று குட்டி தெய்வத்தை உண்டுபண்ணி கொடுத்தான் . அவர்கள் அதை ஆராதித்தார்கள் .
அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ இறங்கி போ ! எகிப்து தேசத்தில் இருந்து நீ அழைத்து கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களை கெடுத்து கொண்டார்கள் என்றார் . மோசே வந்து பார்க்கும் போது ஜனங்கள் கன்று குட்டி தெய்வத்தை வணங்கி நடனம் பண்ணுவதை கண்டான் . மோசே கோபம் மூண்டவனாய் கன்று குட்டி தெய்வத்தை அக்கினியால் சுட்டு அரைத்து ஜனங்களை குடிக்க செய்தான் ( யாத் 32 : 20 )
பின்னர் மோசே சகல ஜனங்களையும் பார்த்து கர்த்தருடைய பட்சத்தில் நிற்ப்பவன் யார் ? அவர்கள் என்னண்டை வரக்கடவர்கள் என்றான் ( யாத் 32 ; 26 ). உடனே லேவி கோத்திரத்தார் மோசேயிடம் சென்றார்கள் . அப்பொழுது மோசே கர்த்தரின் கட்டளைப்படி அவனவன் தன் தன் சகோதரனையும் தன் தன் அயலானையும் கொன்று போடகடவன் என்றான் ( யாத் 32 ; 27 ) . உடனே லேவியர் பட்டயத்தை உருவி அன்றைய தினம் 3000 பேரை கொன்றார்கள் .
இவ்விதம் தேவ கட்டளைப்படி லேவியர் , சகோதரர் என்று பாராமல் பட்டயத்தை உருவி வெட்டினபடியால் லேவியரை தமக்கென்றும் , தம்முடைய ஊழியத்திற்கு என்றும் கர்த்தர் பிரித்து எடுத்து கொண்டார் ( உபா 33 : 8 , 10 )
ஆகவே இக்காரணத்தால் , எகிப்தில் இருந்து புறப்பட்ட வேளை சகல இஸ்ரவேலிலும் முதற்பேறு தமக்குரியது என்று சொல்லியதை நினைத்து அதற்க்கு பதிலாக லேவியரை முதற்பேறாக நியமித்து கொண்டார் ( எண் 3 : 12 , 13 ; எண் 8 : 18 ) இவ்விதமாய் லேவியர் தேவனுடைய ஊழியத்திற்கு என்று வேறு பிரிக்கப்பட்டார்கள் .
லேவியின் வரலாறு : இவர் யாக்கோபின் மூன்றாவது குமாரன் ( ஆதி 35 : 23 ) . யாக்கோபு பதான் அராமில் தனது மாமனாரின் வீட்டில் 20 வருடம் தங்கினார் . பின்னர் யாக்கோபு தகப்பன் வீட்டிற்கு சென்றார் . போகிற வழியில் சாலேம் என்னும் சீகேம் பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டார் ( ஆதி 33 : 18 ). அங்கிருக்கும் போது யாக்கோபின் மகள் தீனாள் தேசத்து பெண்களை பார்க்க போனாள். அப்பொழுது சீகேம் தீனாளை கண்டு இச்சித்து தீட்டுப்படுத்தினான் . இதினால் யாக்கோபின் பிள்ளைகளுக்கு கோபம் உண்டாயிற்று . எனவே யாக்கோபின் பிள்ளைகளான சிமியோனும் , லேவியும் தங்கள் பட்டயத்தை உருவி அவ்வூர் வாலிபர் அனைவரையும் கொன்று போட்டார்கள் . ( ஆதி 34 : 25 ) . இந்த காரணத்தால் யாக்கோபு தனது கடைசி காலத்தில் சிமியோனையும் , லேவியையும் சபித்தார் . ( ஆதி 49 : 5 , 7 ) . இவாறு லேவி சபிக்கப்பட்டவன் ..
ஆனால் சாபதிற்க்குள்ளான லேவி சந்ததியார் , கர்த்தருக்காக கர்த்தருடைய பட்சத்தில் வைராக்கியமாய் நின்றதால் சாபத்தை போக்கி ஆசிர்வாதத்தை பகிர்ந்து கொள்ள , கர்த்தர் அவனை கனமான ஊழியத்திற்கு பாத்திரமாக்கினார் .
நீங்கள் யாருடைய பக்கம் .....?
-------------------தொடரும் ------------------. அடுத்த பதிவில் " எப்படிபட்டவன் ஊழியதிர்க்குரியவன் .?" என்பதை நாம் பார்க்கலாம் . கர்த்தரின் கிருபை நம்மோடு இருப்பதாக ......ஆமென்