ஞாயிறு, நவம்பர் 20, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் 3

கடந்த இரண்டு பதிவுகளில் உன்னதப்பாட்டை குறித்த முன் உரைகளையும் ,  இந்த புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதயும் பார்த்தோம் .  தொடர்ந்து ஒவ்வொரு வசனங்களாக நாம் தியானிப்போம் ...



 முதலாம் அதிகாரம் : 

உன்னத 1  ; 2  , " அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக "
மணவாட்டி ( தேவனுடைய பிள்ளை ) மணவாளனாகிய இயேசுவின் மீதுள்ள அன்பை விளங்க பண்ணுகிறாள் .  ஏனெனில் மனவாட்டிக்கு மணவாளன் மீது அன்பு பெருகி விட்டது . ஆனபடியால் இப்பொழுது மணவாளனின் முத்தத்தை நாடுகிறாள் .  நாம் ஒரு குழந்தையை தூக்கும் போது அதன் மீது அன்பு பெருகுவதால் நாம் முத்தமிடுகிறோம் .  ஏன் எனில் அன்பு பெருகும் போது தான் முத்தமிடுவார்கள் . முத்தத்தின் பிறப்பிடம் அன்பு தான் .

வேதத்தில் இரண்டு வகை முத்தம் காணப்படுகிறது .
  1. வஞ்சனையின் முத்தம் ( நீதி 27  : 6 )
  2. அன்பின் முத்தம் .
 வஞ்சனையின் முத்தம் :
இது யூதாசின் முத்தம் .  யூதாஸ் இயேசுவோடு 3 . 5  வருடங்கள் நடந்தான் . அருமையான போதனைகளை கேட்டான் . சீசன் என்ற பெயரை பெற்றான்.   எனினும் பொருளாசைக்கு இடம் கொடுத்தான் . அதனால் தான் வேதபாரகர்  , பரிசேயர் ஆகியோரை அன்டினான் . பிராண நாதனை காட்டி கொடுக்க 30  வெள்ளி காசை பெற்றான்.  எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டு இயேசுவை அண்டினான்.  " ரபீ... நீர் வாழ்க " என்று கழுதை கட்டி முத்தமிட்டான் . இதுவே வஞ்சனையின் முத்தம் .  முடிவில் சமாதானத்தை இழந்தான் ....


இவ்வாறே , தாவீது ராஜாவின் குமாரன் அப்சலோம் எழும்பினான் .  அப்சலோம் அழகில் சிறந்தவன்  என்றாலும் தன தம்பியாகிய அம்னோன் செய்த தவறுக்காய் அவனை கொன்றான் .  ( II  சாமு 13 ம்  அதி ).    இதினால் தன தகப்பனாகிய தாவீதால் தண்டிக்கப்பட்டான் . தகப்பன் தன்னை தண்டித்ததை அப்சலோம் பகையாக மனதில் வைத்து கொண்டு தகப்பனின் சிங்காசனத்தை கவிழ்த்து அவனை கொலை செய்யா தீர்மானித்தான் .   அதற்காக தகப்பன் கீழ் உள்ள ஜனங்களை கைவசமாக்க முயன்றான் .  ஆகையால் அவன் ஜனங்களை காணும் போது கட்டி முத்தமிட்டு அவர்களை வசிய படுத்தினான் என்று  வேதத்தில் காண்கிறோம்  ( II சாமு 14  :  1  -  6  ) .  ஆனால் அவனுடைய முடிவும் பரிதாபம் ...!

 ஆகவே உலகில் பொருளாசை ,  உலக ஆசை இவைகளை வைத்து கொண்டு அன்புள்ளவர்களை போல நடிப்பதும் , முத்தமிடுவதும் வஞ்சனையான முத்தங்கள் .  இவைகள் தான் உலக மனிதர்கள் நமக்கு கொடுப்பது .  இவைகளின் முடிவு பெரும்பாலும் பரிதாபம் .


 அன்பின் முத்தம் :

இது உள்ளத்தில் இருந்து எழும்பி வரும் முத்தம் .  இந்த முத்தமே யாவருக்கும் தேவையானது .  வீரனாகிய தாவீது கோலியாத்தை கொன்று இஸ்ரவேலுக்கு ஒரு பெரிய ரட்சிப்பை கொண்டு வந்தான் .  இதை கண்ட சவுலின் குமாரனாகிய யோனத்தானின் இருதயம் தாவீதோடு ஒட்டி கொண்டது .  அதனால் தான் தாவீதின் ஆபத்து காலத்தில் இந்த யோனத்தான் தன நண்பனாகிய தாவீதை காட்டி அணைத்து முத்தமிட்டு தன் தகப்பனின் தீய நோக்கத்தை அறிவித்தான்  ( I சாமு 20  : 41 )

இது தான் அன்பின் முத்தம் .  உலக தோற்ற முதல் அன்பாகவே இருக்கிற ஒரு தேவன் உண்டு .  அவர் அன்பாகவே இருக்கிறார் .  அந்த மணவாளனாகிய இயேசுவின் முத்தத்தை மணவாட்டி விரும்புகிறாள் .  ஏன் எனில் ,  அந்த அன்பின் முத்தத்தில் ஆறுதல் இருக்கிறது , சமாதானம் இருக்கிறது , மணவாட்டியின் மேல் உள்ள வாஞ்சை இருக்கிறது .


அதனால் இந்த உலகத்தின் மாய்ந்து போகும் அன்பை விட  , மாறாத மணவாளன் இயேசுவின் அன்பை தேடுவோம் ......!

தொடரும் .....



ஞாயிறு, நவம்பர் 13, 2011

உன்னதபாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் இரண்டு .


சென்ற வாரத்தில் உன்னதபாட்டின் முன்னுரையை நாம் தியானித்தோம் .  தொடர்ந்து இந்த வாரத்திலும் உன்னதப்பாட்டின் தியானத்தை தொடர்வோம் .


உன்னதப்பாட்டை பங்கு பங்காய் வைத்து படிக்கும் விதம் :

  1. முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் நான்காம் அதிகாரம் ஏழாம் வசனம் முடிய இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை தட்டி எழுப்பி பூரணத்திற்கு நடத்தும் அனுபவத்தை காணலாம் .
  2. நான்காம் அதிகாரம் எட்டாம் வசனம் முதல் ஆறாம் அதிகாரம் பன்னிரெண்டாம் வசனம் முடிய பூரணமடையும் போது சோர்வடைவதையும் , மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டு பூரனப்படுவதையும் , பூரனமடைந்தவர் எடுத்து கொள்ள படுவதையும் , பூரனமடையாதோர் கைவிடப்படுவதையும் காணலாம் .
  3. ஏழாம் அதிகாரம் ஆகாயமண்டலதிற்க்கு எடுத்து கொள்ளப்பட்ட மணவாட்டி அல்லது பூரணபட்டோர் உலகத்தில் இருக்கும் போது மனவாளனுக்காக செய்த ஊழியங்களை மணவாளன் புகழ்ந்துரைக்கும் அனுபவங்களை காணலாம் .
  4. எட்டாம் அதிகாரமோ , கைவிடப்பட்ட சபையின் அங்கலாய்ப்பையும் , ஆயிரமாண்டு பூமியில் வாழ மணவாளன் மனவாட்டியோடு பூமிக்கு வரும் காட்சியையும் காணலாம் .
 குறிப்பு 1  :  உன்னதப்பாட்டில் குறிப்பிடபட்டிருக்கும்  சாலமன் என்பதை சமாதான பிரபுவாகிய இயேசு என்றும் , சீயோன் குமாரத்தி என்பதை மணவாட்டி என்றும் , எருசலேம் குமாரத்தி என்பதை பரிசுத்த ஆவி பெற்று பூரனப்படாதவர்கள் என்றும் வைத்து படிக்க வேண்டும் .

குறிப்பு 2  : உன்னத பாட்டிலுள்ள வசனங்களை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக ரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அனுபவம் அடைந்தவனோடு கர்த்தர் பேசி முன்னேற்றி கொண்டு போகிறார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் .

பாவத்தில் ஜீவிக்கும் அனுபவம் வேறு , இரட்சிக்கப்பட்ட அனுபவம் வேறு  , பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளும் அனுபவம் வேறு என்பதை நாம் கற்று இருக்க வேண்டும் .  ஏன் என்றால் அநேகர் உபதேசத்தின் வித்தியாசத்தை விளங்கி கொள்ளாமல் கலப்பான உபதேசத்திற்க்குள் அகப்பட்டு கலங்குகின்றனர் . 

 பாவத்தில் ஜீவிக்கிறவன் பாவியே . பாவிகளை ரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார் .  I திமோ 1 : 15

இந்த இயேசுவை பாவி விசுவாசிக்கும் போது ரட்சிப்படைகிறான்  ரோமர் 10 : 9 , 10

இரட்சிக்கப்பட்ட பிறகு பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளுகிறான் .  இயேசுவோடு 3 . 5 வருடம் சீஷர்கள் நடந்த பின்னர் காத்திருந்து பரிசுத்த ஆவியை பெற்று கொண்டனர் .  லூக்கா 24 : 49 .  அப்படியே பெந்தெகொஸ்தே நாளுக்கு பின்னரும் சமாரியர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று கொண்ட பின்னரும் பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளவில்லை என்று காண்கிறோம் .  அப் 8 : 12 - 14

 பரிசுத்த  ஆவியை பெற்று கொள்ளும் போது பரிசுத்த ஆவியை பெற்று கொண்டேன் என்பதற்கு அடையாளமாக அந்நிய பாஷை அவனில் கிரியை செய்கிறது .  அந்நிய பாஷை இருவிதமாக கிரியை நடப்பிக்கிறது .

ஓன்று அந்நிய பாஷை வரம் .  மற்றொன்று அந்நிய பாஷை அடையாளம் .  அந்நிய பாஷை வரமாக கொடுக்கப்படா விட்டால் எப்பொழுதும் அந்நிய பாஷையில் பேசுவதில்லை .  ஆவியினால் நிரம்பும் போது மாத்திரமே அந்நிய பாஷை அடையாளம் அவனில் காணப்படும் .  இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .  இவ்வாறு பரிசுத்த ஆவி பெறும் போது தான் மனித உள்ளத்தில் தேவ அன்பு ஊற்றப்படுகிறது .  ரோம 5 : 5 .  இவ்வித அன்பினால் நிரப்பப்பட்ட விசுவாசி அலது சபையே தேவனுடைய அன்பை நாடுவாராயிருக்கும் . அவ்வித அன்பை நாடுகிற படியினால் மணவாளனை பார்த்து மணவாளி சொல்லுகிற காரியங்கள் .......




.... தொடரும் .......

திங்கள், நவம்பர் 07, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் ஓன்று

உன்னதப்பாட்டை பற்றிய பற்பல அபிப்பிராயங்கள் :


உன்னதப்பாட்டை குறித்து பலரும் பற்ப்பல அபிப்பிராயங்கள் கூறுவதுண்டு .   அவற்றுள் சிலர் , இப்புத்தகமானது யூதர்களின் கலியாண நாட்களில் கல்யாணதிர்க்காய் நியமிக்கப்பட்ட புருசனையும் ஸ்திரீகளையும் குறித்து புகழ்ந்து பாடி வந்த பாட்டு எனக் கூறுவார்கள் .

சிலரோ ,  ஒரு ஸ்திரியானவள் ஒரு பெண் குழந்தையை பெற்று கிச்சிலி மரத்தடியில் போட்டு விட்டு போய் விட்டாள்.  அந்த குழந்தையானது தொப்புள் அறுக்கப்படாமல் அவ்விடத்திலே கிடந்தது .  இதை கண்ணுற்ற ஒரு ஆட்டிடையன் குழந்தையின் மீது இரக்கங்கொண்டு அதின் தொப்புளை அறுத்து , கழுவி சுத்தம் செய்து அவன் வீட்டில் கொண்டு போய் வளர்த்தான் .  அந்த குழந்தை வளர்ந்து வரவே அவளை விவாகம் பண்ணி கொள்ள எண்ணினான் . இவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்ணை தனது திராட்சை தோட்டத்திற்கு காவல்க்காரியாக நியமித்து வைத்தான் .  அவள் திராட்சை தோட்டத்தை காத்து வரவே , ஒரு நாள் சாலமன் ராஜ காட்டில் வேட்டையாட சென்றிருந்தார் . அப்பொழுது அவர் திராட்சை தோட்டத்தை காத்து கொண்டிருந்த அந்த பெண்ணின் மேல் நேசம் கொண்டு அவளை அரண்மனைக்கு அழைத்து கொண்டு போனார் .  ஆனால் அரண்மனையின் சகல மேன்மைகளையும் கண்ட அந்த பெண் அவைகளின் மேல் நேசம் கொள்ளாமல்  ,  அந்த ஆட்டிடையன் மேல் உள்ள நேசத்தினால் புலம்பி கொண்டு இருந்தாள்.  இதை கண்ட சாலமன் அந்த பெண் இடையன் மேல் கொண்ட நேசத்தை அறுக்க முடியாது என்று கருதி அந்த பெண்ணை திரும்ப காட்டில் கொண்டு போய் விட்டார் என்ற சரித்திரம் கூறுவாரும் உண்டு .

சிலரோ , சாலமன் ராஜா தேவ ஆவியினால் நிரம்பியிருந்த காலத்தில் வரப்போகும் மணவாளனாகிய இயேசுவை குறித்தும்  மணவாட்டி சபையை குறித்தும் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்க தரிசன புத்தகம் எனகூருபவரும் உண்டு ..



நமது அபிப்பிராயம் :-

வேத புஸ்தகத்தில் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு  என இரு புஸ்தகங்கள் உள்ளது .  அதில் பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளது .   இந்த 39 புஸ்தகங்களிலும் தீர்க்கதரிசன பாகங்களும் உண்டு .    என்றாலும் அப்புத்தகங்களை சரித்திர புத்தகங்கள்  , தீர்க்க தரிசன புத்தகங்கள் , சங்கீத புத்தகங்கள் எனப் பிரித்து படிக்கலாம் .
 
 சரித்திர புத்தகங்களை எடுத்தால் எல்லா புத்தகங்களும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையதாக இருப்பதை காணலாம் .   ரூத்தின் சரித்திரத்தை எடுத்து கொண்டால் இப்புத்தகத்திற்கு ஏன் வேத புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்று கேட்போமானால் தாவீதின் வம்ச வரலாற்றை தெளிவுடன் அறிந்து கொள்ள இப்புத்தகம் அவசியம் .  ஆகவே சரித்திர புத்தகங்கள் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது .
 
 ஆனால் உன்னதபாட்டோ இடைப்பெண்ணின் சரித்திரமென கூறும் போது மற்ற ஆகமங்களோடு எவ்வித தொடர்பும் அந்த புத்தகத்திற்கு இல்லை.   ஒரு வேளை சாலமனின் நேசத்திற்கு ஏற்ப்பட்ட தோல்வி என கூறக்கூடுமானால் அவரின் இதர தோல்விகளை போல இதையும் குறிப்பிடலாம் .  ஆனால் சாலமோனின் தோல்வியை ஒரு புத்தகமாகி அதற்கு ஆங்கிலத்தில் " சாலமனின் பாட்டு " எனவும்  மலையாளத்தில் " உத்தம கீதம் "  எனவும் ,  தமிழில் " உன்னத பாட்டு " எனவும் பெயரிட முடியுமோ ..? ஒரு காலும் முடியாது .
 
 தமிழ் மொழி பெயர்ப்பில் இந்த புத்தகத்திற்கு உன்னத பாட்டு என்ற அழகான பெயரை வாசிக்கிற போதே இந்த புத்தகத்தின் அழகு  ஜொலிக்கிறது .   மெய்யாகவே ஆண்டவர் இப்புத்தகத்தில் உன்னதத்தில் உள்ள பொக்கிசங்களை அடக்கியே வைத்திருக்கிறார் .  ஆகவே உன்னததிர்க்குரிய பொக்கிசத்தை பூமிக்குரியதாக்கி அதன் கனத்தை குறைப்பது ஞானக் குறைவே ஆகும் . 
 
 ஆகவே இந்த புத்தகமானது  " வரப்போகிற மணவாளனாகிய இயேசுவை பற்றியும் மணவாட்டி சபையை பற்றியும் சபை பூரணப்பட வேண்டிய வித பற்றியும் ஆவியானவர் உவமான ரூபத்தில் தீர்க்க தரிசனமாக முன் குறித்த தீர்க்க தரிசன புத்தகம் " என்பது தான் வெளிப்பாடு .  இதை அனுசரித்தே இந்த புத்தகத்தின் மகத்துவங்களை நாம் தொடர்ந்து தியானிப்போம் ..

எல்லா துதியும் , கணமும் , மகிமையும் அவருக்கே .... ஆமென் ....

------  தொடரும்  ---------

-------------------------------------------------------------------------------------------------------------
மிகவும் கனத்திற்கு உரிய ஒரு தேவ ஊழியரின் புத்தகத்தின் பகுதிகளை மாத்திரம் நான் தொடர்ந்து இந்த பகுதியில்  பகிர்ந்து கொள்ளுகிறேன் .